12 மே 2018

செ.ப. ஜாபர் அலி மாமு நினைவுகள்

நேற்றைய முந்நாள் காலையில் முகநூல் பார்க்க அதில் செ.ப.மன்சூர் அண்ணன் (ஆலஞ்சியார்)
“ தம்பி .. உனக்கு பொன்னாடை போர்த்தியதை பாத்தேன்டா .. ரொம்ப சந்தோச இருந்துச்சுடா..
இனி எப்போது கேட்பேன்..
இந்த வெள்ளந்தி மனுசனின் குரலை..
..
போய் வா அண்ணனே..
..
கொஞ்சம் அழவேண்டும்’ என்று எழுதி இருந்தார் பார்த்து திடுக்கிட்டேன்.. மிக அதிர்ச்சிக்குள்ளானேன்..
ஆமாம் அது எங்கள் எதிர்வீட்டு அண்ணன் செ.ப.ஜாபர் அலி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி, மறைந்த செ.ப. ஜாபர் அலி அவர்களும், ஆலஞ்சியார் மன்சூர் அண்ணன் அவர்களும் எங்கள் நன்னி வீட்டுக்கு எதிர்வீட்டுகாரர்கள் தான்.( தஞ்சை மாவட்டம், வழுத்தூர்) இருவரும் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பி உறவு. அதனால் ஜாபர் அலி அண்ணனின் மறைவை அத்தனை பதைப்புடனும் தவிப்புடனும் எழுதியிருந்தார். பிறகும் ஒரு பகிர்வும் ஒரு இரங்கற்பாவும் கூட எழுதி ஆற்றாமையை வெளிப்படுத்தி இருந்தார். நானும் படிக்க படிக்க மனவேதனைக்குள்ளானேன்.
யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு செய்தி இவ்வளவு சீக்கிரம் காதுகளில் ஒலிக்கும் என்று, அவர் உடம்பு சுகவீனமாக இருந்தவரில்லை, நல்ல திடகாத்திரத்துடன் வலுப்பமாக இருந்தவர் தான். இருபது நாட்களுக்கு முன்பு கூட நேரில் பார்த்து பேசியிருக்கிறேன், எப்போதும் அன்பும் பாசமும் தன் பேச்சில் கொட்டிப்பேசுவார். மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்த்தாகவும், கடைசி நேரத்தில் பெரிய பிள்ளைகள் யாரும் இல்லாது அந்த இக்கட்ட்டான சூழலில் மாரடைப்பு ஏற்பட்ட அவரை டாக்டரிடம் காரில் அழைத்துச்செல்ல அல்லது அம்புளன்ஸை அழைக்க என படாது பாடு பட்டிருக்கிறார்கள் வீட்டார்கள் என அறிய மனதில் பெரிய வலி உண்டானதை தவிற்க இயலவில்லை.
மறைந்த் செ.ப.ஜாபர் அலி மாமு கீழ்நிலையிலிருந்து உழைப்பால் மேலே வந்தவர். ஏழ்மையின் ஏக்கம் அதன் மனவலி எல்லாம் அறிந்திருந்தவர். அதனாலேயே எங்கள் வழுத்தூர் கீழத்தெரு பிள்ளைகள் மற்றும் உறவுபிள்ளைகளுக்கு அவர் மலேசியாவில் நடத்திவந்த ஹோட்டலில் வாய்பபளித்து பேருதவி செய்தவர், குடும்பங்களில் விளக்கு எரிய காரணமாய் இருந்தவர்.
எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது, தொன்னூறுகளின் ஆரம்பத்தில் டிவி எஸ் 50யில் ஒரு சுத்து சுத்தி வருவதே கிடைக்காத பெரும் விசயம், அப்போது தனது மகன் ஹாஜா மைதீனை ராஜா போல வளர்த்த அவர் மகனுக்கு “யமஹா 100 சீசீ” கருப்புக்கலர் மோட்டார் வாங்கி கொடுத்திருந்தார். அப்போதெல்லாம் அது மிக அபூர்வம்.. அந்த பைக்கை சுற்றி தெருபசங்க பட்டாளம் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும், உண்மையில் அந்த வண்டியை ஓட்டி வருவதிலும் அதன் மோட்டார் ஓடும் மனதை வருடும் சப்த்த்தை கேட்பதிலும் ஒரு அலாதி மகிழ்ச்சி தான் ஏற்படும். நானும் கூட பலமுறை ஜாபர் அலி மாமு அவர்களிடம் “ஒரே ஒரு சுத்து சுத்திட்டு வந்திடுறேன் மாமு” எனக் கேட்டு வாங்கி வாங்கி எனது ஆசைகளை தீர்த்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் மனிதர் மறுப்பே சொல்ல மாட்டார், கீழத்தெரு பங்களில் பலரும் அப்போதெல்லாம் அந்த பைக்கில் தான் மோட்டார் ஓட்ட கத்துக்கொண்டனர் பலமுறை கீழே விழுந்தும் வண்டியை கொண்டு வருவார்கள் ஆனால் அதே சிரித்த முகம் தான். பிறகும் அதே பையன்களுக்கும் வண்டியை ஓட்டக்கொடுப்பார். ஏழை சிறுவர்களின் ஏக்கங்களைவிட அவருக்கு அந்த அபூர்வ பைக் பெரிதாகப்படாது அவரது அந்த மனநிலை அப்போதே எனக்கெல்லாம் பிரமிப்பை ஊட்டும்.
தனது கடின உழைப்பால் மெயின் ரோட்டில் அரச்சலை ஜாபர் அலி அவர்களிடம் இடம் வாங்க, அவரது கனவு இல்லத்தை எனது மாமா சி.தா.அலி அக்பர் சிறந்த முறையில் அழகுற கட்டிக்கொடுத்தார். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டியதை செய்து சிலகாலமாக ஊரில் ஆன்மீகத்தேட மிகுந்தவராய் பார்ப்பவர்களுக்கே சிலிர்ப்பூட்டும் வகையில் தேஜஸ் மிக்கவராய் கண்ணியமிக்க நீண்ட தாடியுடன் தலைப்பாகையும் தரித்து ஐவேளை தொழுகையும், திக்ருகளும் என தன்னை மாற்றிக்கொண்டு வாழ்ந்துவந்தார். கிட்டே நெருங்கினால் நிறைய ஆன்மீகம் பேசுவார், யார் என்ன பேசினாலும் பொறுமையுடன் அதை ஏற்பார் எதிர் கருத்தையும் ஏன் வசவுகளையும் கூட சகிப்பார். ஒரு காலத்தில் கட்டை மீசையுடன் டிப்டாப்பாக நல்ல ஸ்டைலாக உடைநேர்த்தியுடன் இருந்தவர் வெள்ளை ஜிப்பா போதும் என்ற நிலையில் யாரைப்பற்றியும் கவலைப்படாது தன்னை வடிவமைத்துக்கொண்டார். தன்னோடு நெருங்கியவர்களுக்கெல்லாம் சூஃபியிசக்கருத்தை எத்திவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவரது இழப்பு தாங்கொணா மனக்கவலையை தருகிறது.
வெளிநாட்டில் மகன்கள் இருந்தாலும் ஊரில் தான் இருந்தாலும் உழைக்க மறக்காதவர் தனது செலவின்ங்களுக்கும் குடும்பத்திற்கும் தானே ஏதாவது ஹலாலான தொழில் செய்து வருவாய் ஈட்டி சாப்பிட நினைத்தவர் மகளின் பிள்ளைகள், மகன்களின் பிள்ளைகள் எனக் கொஞ்சி அவர்களை பள்ளிக்கு கொண்டு சென்று அழைத்துவந்து இன்பம் கண்டவர், நான் எனது மகள் ஜைனபை அலிப் பள்ளிக்கு கொண்டு சொல்லும் போதும் அழைக்க செல்லும் போதும் அவரை பார்ப்பேன் அன்பொழுக பேசுவார், இது என் மகன் பிள்ளை, இது எனது மகள் பிள்ளை என அந்த மழலையர்களை அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார், இனி யார் அவர்களை கொஞ்சுவதற்கும், பள்ளியிக்கு ஆசை மொழி பேசி கொண்டு செல்வதற்கும் ஆர அணைத்துத்தழுவி பின் வீடுக்கு அழைத்துச்செல்வதற்கும்…?  
பாவம் அந்த பிஞ்சு பேரக்குழந்தைகள் மட்டுமல்ல.. எல்லோரிடமும் அன்பைக்கொட்டும் அவரது துணைவியார் பீபி மாமியும் தான். வீட்டிலும், சொந்த பந்த்ததிலும் ஊரிலும் அவரது இழப்பு மிகுந்த தாக்கத்தை எல்லார் நெஞ்சிலும் ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. நபிகளார் சொன்னது போல மறைவுக்கு பிறகு அதிகமானோர் அன்னாரின் நல்லனவற்றை பிரதானமாக சொல்லுவதிலிருந்தே அவர் மிகச்சிறந்த ஆன்மா என்றும், சுவர்க்கவாதி என்பதையும் நாம் அறுதியிட்டுச்சொல்ல்லாம். நல்லோர்கள் ஆன்மா அவரை ஆசீர்வதிக்கட்டும். வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக, ஆமீன்.
நிச்சயமாக நாம் அவனிலிருந்தே வந்தோம்… அவனிடமே மீளுகிறோம்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
12—05-2018, 2.34 பிற்பகல், ஷார்ஜா.
Thanks for Photo: Abdul Kader Rizwan

கருத்துகள் இல்லை: